செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

வாஸ்து மூலைகளும் மனித மூளைகளும்



சூரிய வெளிச்சம், காற்று போன்றவற்றை தேவையான அளவு வீட்டிற்குள் கொண்டு வருவதே வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையாக இருந்து வந்திருக்கிறது. அதையே வாஸ்து பகவான் தன் தலையை ஈசான்ய மூலையிலும் (வடகிழக்கு) கால் பகுதியை கன்னி மூலையிலும் (தென் மேற்கு) வைத்து குறுக்காக படுத்திருப்பதாக கூறி ஒரு வரைமுறைகளை வகுத்து பின்படுத்த அறிவுறுத்தினர்.  பழைய காலங்களில் மக்களின் வாழ்வு முறையையும் தட்ப வெப்ப நிலையையும் கருத்தில் கொண்டு வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை எவ்வளவோ காலங்கள் கடந்தும் மக்களின் வாழுவு முறைகள் பெரும்பாலும் மாறிவிட்ட நிலையிலும் அதை பயன்படுத்த நினைப்பதை விட முட்டாள்தனமான செயல் வேறு இருக்க முடியாது. இது இந்த காலத்தில் செடி கொடிகளை உடைகளாக பயன்படுத்துவதற்கு சமமான டிராஜடி.


இதை விடவும் பெரிய காமெடி மனையடி சாஸ்திரத்தையும் இதில் புகுத்தி இந்த அளவுதான் இருக்க வேண்டும் என பயமுறுத்துவது. மனையடி சாஸ்திரத்தில் ஓரு அடி என்பது வீட்டு தலைவனின் காலடி என தெளிவாக குறிக்கப் பட்டுள்ளது. அந்த வீட்டு தலைவரின் காலடி அளவிற்கு ஓரு தச்சு செய்து அதை கொண்டுதான் நீள அகலம் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இப்போது பொதுவான டேப் அளவு வந்து விட்ட்தால் இதன் அடிப்படையே மாறி விடுகிறது. ஆனால் அதை வைத்து காசு புடுங்கும் கும்பலை பார்த்தால் ஆச்சர்யமாக வருகிறது. ஆதாரமோ, நிருபணமோ இல்லாமல் அப்பாவிகளின் குழப்பமான நிலையை பயன்படுத்தி எப்படியெல்லாம் சம்பாதிக்கிறார்கள். இவர்களது இந்த திறமையெல்லாம் வேறெதிலாவது காட்டினால் இந்தியா இந்நேரம் வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டத்தில் சேர்ந்திருக்குமே எனத்தோன்றுகிறது

வாஸ்து மூலைகளும் மனித மூளைகளும்


அக்னி மூலை – தென் கிழக்கு

அக்னிமூலையில்தான் அடுப்பு இருக்க வேண்டும் என வாஸ்து கூறுகிறது. அந்த காலத்தில் விறகு அடுப்புதான் பயன்படுத்தினார்கள். அச்சமயத்தில் வெப்பம் வீட்டிற்குள் அதிகம் வராமல் இருக்கவும், தீ அணையாமல் நன்றாக எரியவும் காற்றின் திசைகேற்ப தென்கிழக்கில் சமையறை அமைத்தார்கள். நவீன யுகத்தில் கேஸ் அடுப்பை பயன்படுத்தும் காலத்திலும் அதையே சொல்லி காசு பறிக்கும் கும்பலை என்ன செய்யலாம்.?

ஈசான்ய மூலை – வட கிழக்கு

மனையில் ஈசான்யமூலைதான் சுத்தமாகவும், தண்ணீர் தொட்டி போன்றவைகளும் இருக்க வேண்டும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. மழை நீர் வடிவதற்கு வாகாகவும், தண்ணீர் வழிந்தோட ஏதுவாகவும் இந்த மூலையானது மற்ற மூலைகளை விட பள்ளமாக இருக்க வேண்டும் என வரையறுக்க பட்ட்து. தண்ணீர் இருக்க வேண்டும் என்பதற்காக மீன் தொட்டிகளையெல்லாம் விற்பனை செய்து வருகிறார்கள்

கன்னிமூலை – தென்மேற்கு

தென்மேற்கு மூலைதான் மேடாக இருக்க வேண்டும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இந்த மூலை மேடாக இருந்தால்தான் இதற்கு நேரேதிர் மூலையான ஈசான்யத்திற்கு தண்ணீர் வழிந்தோட வசதியாக இருக்கும். இதையே சொல்லி ஓவர் ஹெட் டேங்க் கூட கன்னிமூலையில்தான் இருக்க வேண்டும் என கூறி வருகிறார்கள்.

வாயு மூலை – வடமேற்கு

வாயு மூலையில்தான் கழிவு நீர் தொட்டிகள் அமைய வேண்டும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இதுவும் ஈசான்ய மூலைக்கு சொன்ன மாதிரிதான் நீர் வழிந்தோட ஏற்ற வகையில் ஈசான்ய மூலையில் தண்ணீர் தொட்டியும் வாயு மூலையில் கழிவு நீர் தொட்டியும் அமைய வேண்டும் என அறிவுறுத்துகிறது. தற்போதைய பைப்பிங் சிஸ்டம் மூலம் நமக்கு வேண்டிய இடங்களில் வாட்டம் கொடுத்து விடலாம் என்பதால் இதுவும் இங்கு தேவையில்லாமல் போகிறது.

எந்தெந்த மூலையில் என்னென்ன அறைகள் வரலாம் என்பதை குறிக்கும் வாஸ்து வரைபடம் கீழே



மேலே குறிப்பிட்டதும் கூட வாஸ்துவை காட்டி இவர்களாக வரைந்தவைதான். நமக்கு என்ன தேவையோ, எது வசதியோ அதை கருத்தில் கொண்டு வீட்டை அமையுங்கள். மற்றபடி வாஸ்து பயமுறுத்தல்கள் எல்லாம் இந்த மெயிலை 100 பேருக்கு பார்வேர்ட் செய்யாவிட்டால் அவ்வளவுதான் என வரும் மெயிலுக்கு சமானம்தான்


= = =
 இந்த சுட்டியில் பார்த்த சில பயமுறுத்தல்கள்

”இயற்கையாகவே தென்கிழக்கு (அக்னி) மூலையில் நீராதாரங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படி நீராதாரங்கள் இருந்தால் அந்த வீட்டில் தங்கியிருப்பவர்களுக்கு அடிக்கடி நோய் தாக்குதல் ஏற்படும். வீட்டிற்குள் சிறிய மருந்துக்கடை நடத்த வேண்டிய நிலை வரலாம். அக்னி மூலை பாதிப்பு காரணமாக ஒரு சிலருக்கு வாரிசு இல்லாமல் போகலாம்”

“சில வீடுகளில் ஆண் சந்ததியே இல்லாமல் இருப்பதும் உண்டு. அதற்கு அந்த வீட்டின் ஈசானிய மூலையை அடைத்து வைத்திருப்பதே முதன்மைக் காரணமாக இருக்கிறது. இதன் காரணமாக வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவதும் உண்டு”

= = =

மனையில் நல்ல காற்றோட்டம் வரும் வகையில் வீட்டை அமையுங்கள். நன்கு உழையுங்கள் நல்ல பலன்கள் தேடி வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக